புகாரை வாங்க மறுத்து, அவதூறாக பேசிய போலீசை கண்டித்து மூதாட்டி தீக்குளிப்பு

வேலூரில் புகாரை வாங்க மறுத்து, அவதூறாக பேசிய போலீசை கண்டித்து, காவல் நிலைய வாசலிலேயே மூதாட்டி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கருப்பாயி. கணவரை இழந்த இவருக்கும், பக்கத்துவீட்டுக்காரருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அவரை அவதூறாக பேசி, போலீசார் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மூதாட்டி கருப்பாயி, தனக்கு நியாயம் கோரி, மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தெற்கு காவல் நிலைய வாசலிலேயே தீக்குளித்தார்.

இதைப்பார்த்த பொதுமக்களும், போலீசாரும் கருப்பாயி உடலில் பற்றியெரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்தாலும், அதில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாத போலீசார், உயிருக்கு போராடிய மூதாட்டியை கீழேயே போட்டு வைத்து, அவர் மீது பேனரை போட்டு மூடி, வழக்குப்பதிவு செய்வதிலேயே மும்முரம் காட்டினர்.

வழக்குப் பதிவு செய்த பின்னர், அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, கருப்பாயியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கருப்பாயி உடலில் 90 சதவீத தீக்காயம் இருப்பதால், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், கருப்பாயி தற்கொலை முயற்சிக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!