பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துக்குவித்ததாக வழக்கு – கூட்டுப்புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் சொத்துக்குவித்து வைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், கூட்டு புலனாய்வு விசாரணை நடத்த, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் செய்த பணத்தின் மூலம் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரும் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அதில் 2 நீதிபதிகள், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப்பை நீக்க பரிந்துரைத்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள், கூட்டு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டனர். பெரும்பான்மை நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளதால், அவர் பதவி தப்பியுள்ள நிலையில், கூட்டு புலனாய்வுக்குழு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன