Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சந்தித்து பேச உள்ளார்.

சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே அ.தி.மு.கவின் இரு அணிகள் இணைப்பு சாத்தியம் என்று ஓ.பி.எஸ் கூறிவந்தார். இந்த நிலையில் டி.டி.வி தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், அ.தி.மு.க இரு அணிகள் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக கூறியிருந்தார். இதே போன்று அ.தி.மு.கவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தார். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக முயற்சி செய்தும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ்சுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ்சுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மராட்டிய மாநிலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வரும் ஓ.பி.எஸ் மீண்டும் டெல்லி சென்று நாளை மோடியை சந்திக்க உள்ளார். அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ஓ.பி.எஸ் நாளை மோடியை சந்திக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன