Advertisement

பாறை இடுக்குகள், குகைகளில் கூடாரங்கள் அமைத்து வசிக்கும் பழங்குடிகள்

சூடான், சோமாலியா போன்ற நாடுகளில்கூட இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு உள்ளது இந்த பண்ணப்பட்டி இருளர் பழங்குடிகளின் வாழ்க்கை.

ஹொகேனக்கல் வனப்பகுதியில் அமைந்துள்ள சிறிய மலை கிராமங்களில் ஒன்றுதான் பண்ணப்பட்டி. இங்கு இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காடும் மலையும் பிண்ணிப் பிணைந்திருக்கும் பண்ணப்பட்டி இருளர் பழங்குடிகளுக்கு, தேன் எடுத்தல் மற்றும் காட்டில் விளையும் காய்கள், கனிகளை விற்பனை செய்வதுதான் முதன்மை தொழில். வெள்ளையர் வருகைக்கு முன்பிருந்தே இப்பகுதியில் வாழ்ந்து வரும் இருளர் பழங்குடிகளுக்கு, 1990-ஆம் ஆண்டு, வனத்துறை சார்பில் 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்த வீடுகள், இயற்கைப் பேரிடர்களால் சேதமடைந்துவிட்டன. இதனால், தங்குவதற்கு இடமில்லாத பழங்குடிகள், சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை வைத்துக்கொண்டு, பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் சிறுசிறு கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

கனமழை மற்றும் கடும் கோடை காலங்களில் இந்த மக்கள் படும் துயரங்களில் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. வாழ்வாதாரத்தை தேடிச் செல்வது மட்டுமின்றி, வாழ்வதற்கே ஒவ்வொரு நாளும் போராடவேண்டி உள்ளதால், கொஞ்சம் இலகுவான இடத்தில் கூடாரங்கள் அமைத்தால், வனத்துறை அதற்கு அனுமதி அளிப்பதில்லை. மீறி இவர்கள் கூடாரங்கள் அமைத்தால், வனத்துறையினர் அவற்றை பிய்த்து எறிந்து, மிரட்டிச் செல்வதாக பழங்குடிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை, இவ்வாறு விரட்டியடிப்பது மனித உரிமைக்கு எதிரான செயல் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அடிப்படை வசதிகளான, குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை என எதுவுமே இல்லாமல் 200 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அப்படியே இருக்கிறது இந்த இருளர் பழங்குடிகளின் வாழ்க்கை. மின்சாரம் இல்லாததால், பள்ளி செல்லும் குழந்தைகள் விளக்கு வைத்து படிக்கின்றனர்.

கடுமையான குடிநீர் பஞ்சத்தால் கொளுத்தும் வெயிலில் ஒரு கிலோ மீட்டர் நடந்து, சின்னாறு ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு மணலில் குழிதோண்டி ஊற்றில் இருந்து குடிநீர் எடுத்து வருகிறார்கள் இந்த பழங்குடிகள். பள்ளி செல்லும் குழந்தைகள்கூட கையில் குடங்களுடன் குடிநீரை தேடி அலைகின்றனர்

மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் இந்த அவலநிலை குறித்து கேட்டபோது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, தொடர்பை துண்டித்துவிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்ற துறையினரை கை காட்டாமல், பண்ணப்பட்டி பழங்குடிகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலாவது உதவவேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன