நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் – நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் சுங்கச் சாவடி கட்டண வசூல் மையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் பணியாற்றுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுங்க கட்டணம் வசூலித்துவிட்டு மணல் லாரிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்த அனுமதித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்து இடையூறு செய்வதாகக் கூறி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசீதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சுங்கச் சாவடிகளில், அவசர மருத்துவ வசதி மற்றும் மீட்பு வாகனங்கள் உள்ளனவா? கழிப்பறைகள் உண்டா ? சாதாரண நாட்களில் 6 வாகனங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதி பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பியது.

இதுகுறித்துஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை பொது மேலாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஆஜரான தேசிய நெடுஞ்சாலை தலைமை பொது மேலாளரிடம் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றி உள்ளீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முறையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக மேலாளர் தெரிவித்தார்.

பொதுவாக சுங்க கட்டணம் வசூல் செய்யும் இடங்களில் ரவடிகள் மற்றும் சமூகவிரோதிகள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் தவறிழைக்கும் போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கேரளாவில் சுங்கச் சாவடியில் தவறு நடப்பதாக தெரிந்தால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதாகச் சுட்டிக்காட்டினர். பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமலும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன