Advertisement

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை சமரசமின்றி அகற்ற ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கருணைகாட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான 13 மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டனர். நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

அதன் படி 19 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை அளித்த நிலையில், அறிக்கை அளிக்காத 13 மாவட்டங்களின் ஆட்சியர்களும் கடந்த மாதம் 21 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். செப்டம்பர் 21 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அக்டோபர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, நீர்நிலைகள் முக்கிய வாழ்வாதாரம் என்பதால், அவற்றைப் பாதுகாப்பதில் மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். ஆட்சியர்களுக்கு பல்வேறு பணிகள் இருப்பினும், இயற்கையையும், நீராதாரங்களையும் காக்க நேரம் ஒதுக்கி செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். எத்தகைய ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்டாமல், சமரசமின்றி நடவடிக்கை எடுக்குமாறும், அதில் இடையூறு இருந்தால் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தேதியில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன