நீட் விவகாரம் : தோல்வியை ஒப்புக்கொண்டு முதல்வர் பதவி விலக வேண்டும் – ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று என மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம் என மத்திய – மாநில அரசுகள் கூறிவந்தது ஏமாற்று நாடகம் என இதன் மூலம் நிரூபணமாகி விட்டதாக அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாகத் திணித்து சமூகநீதியை சாகடித்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் இதுவரை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு மத்திய அமைச்சரிடமும் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கே ஒப்புதல் பெற முடியாத இந்த அமைச்சரவை இருந்தென்ன பயன் என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது பதவியை அவராகவே ராஜினாமா செய்ய முன்வரவேண்டும் என்றும், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தோல்வியை ஒப்புகொண்டு ராஜினாமா செய்து விட்டு, முதலமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமென்றால், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன