நீட்: ஓராண்டு விலக்கு பெற அவசர சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் வழங்கப்படும் – விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறும் அவசர சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால், நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். இதையடுத்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவருடன் ஆலோசனை நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அவசர சட்ட முன்வடிவை வழங்க அரசு செயலாளர் இன்று டெல்லி செல்வதாகக் கூறிய அவர், ஓராண்டுக்கு நீட் தேர்வில் மிக விரைவில் விலக்கு பெற முடியும் என்றும் கூறினார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் போது சட்ட சிக்கல் ஏற்படக்கூடாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்ததாக அவர் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்றதை போலவே இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன