நிலத்தை அபகரிக்க முயன்றவர்களை எதிர்த்ததால் பெண் மீது தாக்குதல்- வீடு எரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, வீட்டை அபகரிக்க முயன்றவர்களை தட்டிக்கேட்ட தலித் பெண் ஒருவரை, வேற்று சாதியை சேர்ந்தவர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கியதுடன், வீட்டையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

தத்தமங்கலம் ஊராட்சியில், தலித் மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை, வேற்று சாதியை சேர்ந்த சிலர், வருவாய்துறை அதிகாரிகள் உதவியுடன், விற்க முயன்றுள்ளனர். இதற்கு ஈஸ்வரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கடந்த 24-ம் தேதி இரவு ஈஸ்வரியின் குடிசைக்கு தீ வைத்ததில், ஈஸ்வரி மற்றும் யசோதா ஆகியோரின் வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாயின.

இதையடுத்து ஈஸ்வரி வீட்டுக்கு சென்ற கும்பல், ஈஸ்வரியே அவரது வீட்டுக்கு தீ வைத்ததாக கூறி, கை, கால்களை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். தலித் மக்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர்களை விரட்டியடித்துள்ளனர். பின்னர், டி.எஸ்.பி உத்தரவின் பேரில், 4 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான ஈஸ்வரி, அரசு மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளதால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தத்தமங்கலத்தில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநர் மதியழகன், காவல் மற்றும் வருவாய்துறையினருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன