நாளை முதல் படிப்படியாக மழை குறையும் – வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 24 மணிநேரத்தில் வடகடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக்கூறினார். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீச வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்போது வடதிசை நோக்கி காற்று வீசுவதால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன