Advertisement
Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் 18 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பாகிஸ்தான் எல்லை மீறல் மற்றும் தீவிரவாதம், அமர்நாத் பக்தர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, சீனாவுடனான எல்லைப்பிரச்சினை உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பிரதமர் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங், 125 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக அரசு நிலைப்பாட்டை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்,டி வரிவிதிப்பை குறித்தும் காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பும் என்று ஏற்கனவே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் கடன் பிரச்சினை போன்றவற்றையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. நாட்டின் சிறுபான்மை மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி விற்பவர்கள் மீதான தாக்குதல், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீரழிவு போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளாலும் இரு அவைகளிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அனைத்துக்கட்சியின் எம்பிக்களுக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எம்பிக்களும் கலந்துக் கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன