Advertisement

நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு – விசாரணை நாளை ஒத்திவைப்பு

நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கட்டுமான நிறுவன மேலாளர் சண்முகசுந்தரத்திடம் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக தாம் கொடுத்த 3 கோடி ரூபாய் பணத்தை நடிகர் சந்தானம், சில தினங்களுக்கு முன்பு, திருப்பி கேட்டபோது பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சண்முகசுந்தரத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் கடுமையாக தாக்கினார் என்பது புகார். இதில், காயமடைந்த பிரேம் ஆனந்த் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில், நடிகர் சந்தானம் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் வியாழனன்று நடைபெற்றது. அப்போது, நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க, தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பிரேம் ஆனந்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தங்களையும் ஒரு வாதியாக வழக்கில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகர் சந்தானத்தின் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மனு குறித்து தாங்கள் பதிலளிப்பதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞர் பிரேம் ஆன்ந்த், உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரா? என்பதை அறிந்து, வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்குமாறு, காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன