நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுகின்றனர் – மு.க.ஸ்டாலின்

ஆட்சியிலிருப்பவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை உணர்ந்து விளக்கமளிப்பதும், திருத்திக் கொள்வதுமே அழகு என்றும், ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் மிரட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரை விட தமிழகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக மக்களின் உணர்வை வெளிப்படுத்திய கமல்ஹாசன் மீது பாய்ந்து பிறாண்டும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருப்பதாகவும், சட்டத்தைக் காட்டி மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கமல்ஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்ளிட்ட வாக்களித்த அனைத்து குடிமக்களுக்கும் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் ஊழலில் மிதப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை அமைச்சர்ககளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்களை பேசவிட்டு முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பது அடாவடியான செயல் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை காலம் இந்த ஆட்சி என்பதை உணர்ந்து, ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளட்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன