தொண்டை மண்டல ஆதீன மடாதிபதியை, 3 நாட்களுக்குள் ஒப்படைக்காவிட்டால் கைது நடவடிக்கை

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு, ஆயிரக்கனக்கான கோடி ரூபாய் சொத்துகளும், விலை மதிப்பற்ற மரகத லிங்கம், பாணலிங்கம் ஆகியவையும் உள்ளன.

மடாதிபதியாக ஞானபிரகாச தேசிக பரமாச்சாரியார் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மடத்துக்கு வருகை புரிந்த நித்யானந்தாவின் சீடர்கள், நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சித்ததாக புகார் எழுந்தது.

மடத்தில் நடைபெற்ற சிவலிங்க பூஜையை மாற்றியமைத்து, நித்யானந்தா பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, அறங்காவலர் குழுவான தொண்டை மண்டல முதலியார் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தொண்டை மண்டல முதலியார் அமைப்பினர் மடத்துக்கு சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டு மடாதிபதியும், நித்தியானந்தாவின் சீடர்களும் மாயமாகிருந்தனர்.

இதனால், மடாதிபதி கடத்தப்பட்ட்டதாக கூறியும், நித்தியானந்தாவின் பிடியிலிருந்து மடத்தை மீட்கக்கோரியும் தொண்டை மண்டல முதலியார் அமைப்பு சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மடத்துக்கு சென்ற போலீஸார், அங்கிருந்த ஓரிரண்டு நித்யானந்தாவின் சீடர்களிடம், மடாதிபதியை 3 நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் எனவும், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்ட மடாதிபதி ஞானபிரகாச தேசிக பரமாச்சாரியார், நித்யானந்தாவின் சீடர்களுடன் விருப்பப்பட்டே சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவரை வாரிசாக அறிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

தொண்டை மண்டல முதலியார் அமைப்பினர் மடத்தின் சொத்துக்களை ஆக்கிரமிக்க முயல்வதாகவும் மடாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
மடம் ஒன்றும் தனிநபர் உடமையல்ல என கூறியுள்ள தொண்டை மண்டல முதலியார் அமைப்பினர், மடத்தை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் அல்லது அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன