Advertisement
Advertisement

தொண்டு நிறுவன பெண்ணின் மர்ம மரண வழக்கின் விசாரணை தீவிரம்

விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் இருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையின் ஓரம் எரிந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது அந்தப் பெண் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்த ரஷித் நிஷா என்பதும், விளாத்திகுளத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

இவருக்கு இசக்கி முத்து என்ற கணவரும், இரு மகன்களும் உள்ளனர். கணவர் சென்னையில் தையல் தொழில் செய்து வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ரஷித் நிஷா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வேலை நிமித்தமாக வெளியே செல்லும் ரஷித் நிஷாவை கணவர் அவ்வப்போது சந்தேகப்பட்டு கண்டித்ததாகவும், இதனால் ரஷித் நிஷா இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 14ஆம் தேதியன்று நெல்லையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற நிஷா, 2 லிட்டர் பெட்ரோல் வாங்கியதாகவும், அவர் எரிந்த நிலையில் கிடந்த இடத்திற்கு அருகே நின்று கொண்டு இளைஞர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதை அடுத்தே அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எதற்காக பெட்ரோல் வாங்கிச் சென்றார்? அவர் சந்தித்ததாகக் கூறப்படும் நபர் யார்? இது கொலையா? தற்கொலையா? ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் குழப்பம் நீடிக்கிறது.

எனவே ரஷித் நிஷாவின் செல்போனை வைத்துக் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன