தொடர் மழை காரணமாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. மஞ்சளாறு, முல்லைப்பெரியாறு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 135 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் 124.70 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 559 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 218 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைக்கு விநாடிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.53 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 100.44 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதேபோல் தேனி மாவட்டம் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 57 அடியில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 434.30 மில்லியன் கன அடியாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன