தொடர் மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு, வடகிழக்கு மாநிலங்களில் 15 லட்சம் பேர் பாதிப்பு

பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோர மாவட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள விளைநிலப் பகுதி வெள்ளநீருக்குள் மூழ்கியது. 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 63 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு 268 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறினர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட அவர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பெய்த தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன