Advertisement
Advertisement

திருமணிமுத்தாற்றில் ரசாயனம் சேர்ந்த கழிவு நீர் கலப்பால் பொங்கும் நுரை

நாமக்கல் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் ரசாயணம் கலந்து, அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமத்தில் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இருந்து மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது.

சேலத்தில், செவ்வாய்க்கிழமை பெய்த கன மழையினால் சேலம் மாநாகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவு நீருடன் சாயப்பட்டறை கழிவு நீர் ஆற்றில் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை பார்த்திராத அளவுக்கு நுரை ஏற்பட்டுள்ளதால் ரசாயணம் ஏதேனும் ஆற்று நீரில் கலக்கப்படுகிறதோ? என சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெருக்கெடுத்து வரும் நீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு பஞ்சுப் பொதி மூட்டை போல் சாலையை அடைத்துக்கொண்டுள்ளது. மல்லசமுத்திரம்-மதியம்பட்டி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். திடீரென ஏற்பட்ட நுரையாலும், ரசாயணம் கலந்த நீராலும் குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி விவசாய நிலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஆற்று நீரில் இது போல் ரசாயணம் கலக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன