தாதா ஸ்ரீதர் தனபாலின் உடலை இந்தியா அனுப்ப கம்போடிய அரசு அனுமதி

மர்ம மரணம் அடைந்த காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் உடலை இந்தியா கொண்டுவர கம்போடிய அரசு அனுமதித்துள்ளது. கொலை உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபால், கடந்த 4-ஆம் தேதி கம்போடியாவில் சையனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், உடலை இந்தியா கொண்டு வர உதவக்கோரி ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்றத்தில் அளித்த மனுக்களில் அவர் மாரடைப்பால் இறந்ததாகத் தெரிவித்துள்ளார். உடலைக் கொண்டுவரத் தேவையான தூதரக உதவிகளைச் செய்ய வெளியுறவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, உடலை இந்தியா கொண்டுவர கம்போடிய அரசு அனுமதி அளித்துள்ளது. மலேசியா வழியாக விமானம் மூலம் உடல் வரும் ஞாயிற்றுக் கிழமை சென்னை கொண்டுவரப்படுகிறது. தாதா ஸ்ரீதர் தனபால் மீது பல வழக்குகள் உள்ளதால், சென்னை கொண்டுவரப்படும் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, மரபணு பரிசோதனை செய்து அது உண்மையிலேயே ஸ்ரீதர் தனபாலுடையது தானா என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படும் என காஞ்சிபுரம் எஸ்.பி. அதிமானி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன