Advertisement

தருமபுரியில் ஆள் வைத்து ஃபைனான்சியரை தீர்த்துக் கட்டிய 2-வது மனைவி

தருமபுரியில் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக ஃபைனான்சியரின் 2-வது மனைவி, தமது முன்னாள் காதலனிடம் குமுறியதை தொடர்ந்து, அவர் ஆள் வைத்து ஃபைனான்சியரை தீர்த்துக் கட்டி, கல்லூரி அருகே புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த கவியரசு என்பவர், தருமபுரி காமாட்சியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தார். கடனுதவி வழங்கும் சிறிய நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த அவருக்கு செல்வி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வி பிரிந்து சென்றதை தொடர்ந்து, 43 வயதான கவியரசு ஒட்டப்பட்டியைச் சேர்ந்த 23வயது இளம்பெண்ணான நிர்மலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நிர்மலாவின் குடும்பத்தாரும் ஏழ்மை காரணமாக நிர்மலாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கவியரசு மாயமானார்.

இதுதொடர்பாக கவியரசுவின் குடும்பத்தினர், தருமபுரி நகர போலீசில் புகார் அளித்தனர். விசாரணையின் போது கவியரசுவின் இரண்டாவது மனைவி நிர்மலாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்பேசி அழைப்புகளை ஆராய்ந்த போது, நிர்மலா படித்த தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் அபினேஷ் என்பவருடன் அதிக நேரம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபினேசை நெருங்கிய போலீசார், அவரிடம் விசாரணை நடத்திய போது தமது முன்னாள் காதலிக்காக, ஃபைனான்சியர் கவியரசுவை கொலை செய்ததாகக் கூறி போலீசாரை திடுக்கிட வைத்துள்ளார்.

கல்லூரியில் பயின்ற போது நிர்மலாவும், தாமும் காதலித்ததாகவும், ஆனால் குடும்ப சூழல் காரணமாக நிர்மலா, கவியரசுவை திருமணம் செய்யும் சூழல் உருவானதாகவும் விரைவுரையாளர் அபினேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தம்மை விட மனைவியின் வயது குறைவு என்பதால், கவியரசு… பாலியல் உறவை மேம்படுத்துவதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, இரவில் நிர்மலாவுக்கு அதீத பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதை தாங்கிக் கொள்ள முடியாத நிர்மலா தம்மிடம் வந்து குமுறி அழுததாகவும் அபினேஷ் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆட்களை வைத்து கவியரசுவைக் கடத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகவும், உடலை கல்லூரிக்குப் பின் புறம் புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் அபினேஷ் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கவியரசுவின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அபினேஷை போலீசார் அழைத்துச் சென்றனர். வட்டாட்சியர் முன்னிலையில், கவியரசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அபினேஷை கைது செய்த போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன