தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு. புதிதாக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இதே அடிப்படையில் சனிக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. சனிக்கிழமை காலை அவை கூடியதும், உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவை கதவுகளை மூடி வாக்கெடுப்பிற்கான நடவடிக்கை தொடங்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வருவார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றுவார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது தலைமையிலான அரசுக்கு வாக்களிக்க கோருவார். பின்னர் அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் அந்த தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் ப.தனபால் விடுவார். எண்ணி கணித்தல் என்ற முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அதாவது சட்டசபையில் உறுப்பினர்கள் ஆறு பகுதிகளாக அமர்ந்து உள்ளனர். அந்த ஒவ்வொரு பிளாக்கிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எண்ணிக் கணிக்கும் முறையில் ஓட்டளிக்க சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என மூன்று பிரிவுகளாக வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்துவார். ஒவ்வொரு பிளாக் வாரியாக வாக்கெடுப்பு நடக்கும். அந்தந்த பிளாக்கில் உள்ள, சட்டமன்ற உறுப்பினர்களில், தீர்மானத்தை ஆதரிப்போரை எழுந்து நிற்கும்படி சபாநாயகர் உத்தரவிடுவார். அவ்வாறு எழுந்து நிற்கும் உறுப்பினர்க்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின்னர் எதிர்ப்போர், நடுநிலை வகிப்போரின் பெயர்கள் எழுதப்படும். இவ்வாறு 6 பிளாக்களிலும் வாக்கெடுப்பு முடிந்த பின், ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இவ்வாறு 6 பிளாக்கிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். தற்போது பேரவையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சபாநாயகர் தவிர மீதியுள்ள 232 உறுப்பினர்களில், 117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால் அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்க வேண்டும். ஒருவேளை அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க தேவையான 117 வாக்குகளில் ஒன்று குறைந்து 116-ஆக இருப்பின், அப்போது தான் சபாநாயகர் தீர்மானம் சார்பாக ஓட்டளிக்க முடியும். வாக்கெடுப்புக்கு பின்னர், முடிவை சபாநாயகரே அறிவிப்பார். இந்த அறிவிப்பை குறித்த அறிக்கையை அவர் ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன