தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய சென்னை வந்தது மத்தியக் குழு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் மத்திய மருத்துவ நிபுணர் குழு சென்னைக்கு வந்துள்ளது.

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தமிழகத்தில் டெங்கு பாதிப்பை ஆராய மத்திய மருத்துவக்குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

டெங்கு பாதிப்புகளை ஆராய டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மூத்த மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தது. இக்குழு இன்று முதல் தனது ஆய்வை தொடங்க உள்ளது.அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான இந்த 5 நபர் குழுவில் குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிப்ஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இக்குழுவினர் ஆய்வைத் தொடங்குவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன