தெற்கு கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களை அச்சுறுத்தும் முதலைகள்

தஞ்சை மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் அதிகரித்து வரும் முதலைகளால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களும், உயிர் பலி ஏற்படுவதாக ஊர்மக்களும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவற்றுக்கு அங்கேயே சரணாலயம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள அணைக்கரை தெற்கு கொள்ளிடம் ஆற்றில் வசித்து வரும் முதலைகள் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இந்த முதலைகள், 1982-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்து வரப்பட்டதாகவும், வெள்ளம் வடிந்த பின்னர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முதலைகளின் எண்ணிக்கையால், ஆற்றை நம்பி வாழ்க்கையை ஓட்டி வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும், ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்லும் பொதுமக்கள் முதலைகளால் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 15 நாட்களுக்கு முன்புகூட செல்வதுரை என்ற முதியவர் முதலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார். தண்ணீர் குடிக்கச் செல்லும் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும் முதலைகள் இழுத்துச் சென்று தங்களுக்கு இரையாக்கிக் கொள்வதால், விவசாயிகளும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் ஆற்றைவிட்டு வெளியேறும் முதலைகள் குடியிருப்பு பகுதிகளில் இரை தேடி வலம் வருவதால், நடமாட்டத்தை குறைத்துக்கொண்டு பொதுமக்கள் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

நாகை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிபடும் முதலைகள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விடுவிக்கப்படுவதாகவும், இதனால் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உலாவரும் முதலைகளை பிடித்து, அப்பகுதியில் தனியாக முதலைப் பண்ணை அமைக்கவேண்டும் எனவும், இதன் மூலம் அணைக்கரையை சுற்றுலா தலமாக மாற்றி வருவாய் ஈட்டுவதுடன், முதலைகளால் பாதிக்கப்படுபடுவர்களையும் முதலைகளையும் ஒருசேர காப்பாற்ற முடியும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!