Advertisement

டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் ஒப்புக்கு பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள்

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து பள்ளி மாணவர்கள் பலியாகி வரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணிகளை ஒப்புக்கு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஐ தாண்டி விட்டது. சுகாதாரதுறையினர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் போதிய தீவிரம் காட்டவில்லை என்றும் உயர் அதிகாரிகளோடு செல்லும் போது மட்டும் தீவிரமாக வேலை செய்வது போல நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மணலிபுது நகரில் லலித் கிஷோர் என்ற 5 ஆம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான தகவல் வெளியான பின்னர் தான் அந்த பகுதி மாநகராட்சி பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர். அந்த மாணவன் படித்த இன்பெண்ட் ஜீசஸ் பள்ளியில் கொசு ஒழிப்பு பணிகளை ஒப்புக்கு மேற்கொண்டு சென்றதை கண்கூடாக பார்க்க முடிந்தது

முன்கூட்டியே இது போன்ற கொசு ஒழிப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளவில்லை என்றுஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். பள்ளிக்கூட சுவற்றிலும் அதன் அருகில் உள்ள வீட்டு சுவற்றிலும் டெங்கு கொசுக்களை ஒழிப்பது எப்படி என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஏராளமான காலி மனைகளில் மழை நீர் தேங்கி தெப்ப குளம் போல காட்சி அளிக்கிறது. அவற்றில் இருந்து உறபத்தியாகும் கொசுக்களை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்..!

அதே போல காய்ச்சல் பாதிப்புக்குள்ளான சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் வெங்கட் பாலாஜி , சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தான்.

அதன் பிறகு விழித்துக்கொண்ட மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள், அந்த மாணவன் வசிக்கும் பகுதி குப்பைகளால் சூழப்பட்டு சுகாரமற்று கிடப்பதை அறிந்து அந்த பகுதியில் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி

அங்குள்ள ஆட்டுத்தொட்டி நரசிம்மன்தெருவில் குப்பைகள் பல வாரங்களாக அகற்றப்படாமல் கொசு உறப்பத்தி கேந்திரமாக விளங்குவதை பார்க்க முடிந்தது. தாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சூழப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்

வரும் முன் காப்போம் என்ற வாசகம் டெங்கு கொசு ஒழிப்பு சுவரொட்டியில் மட்டும் இருந்தால் போதாது அதனை சுகாதார பணியாளர்கள் நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன