டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற புகாரில் டி.கே.ராஜேந்திரனுக்கு எதிராக, வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரது பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி, கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, டி.ஜி.பிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால், மனுதாரர் கதிரேசனும், அவரது வழக்கறிஞரும் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு கேட்டு கூடுதல் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நியமனம் தொடர்பான வழக்குகளை பொதுநல மனுவாக விசாரிக்க முடியாது என்றும், இதை பல முறை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதாகவும் வாதாடினார்.

குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போதே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்றும் கூறிய அரசு வழக்கறிஞர், பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குட்கா வியாபாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று வாதாடினார்.

எனவே டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், தற்போது மிரட்டல் புகார் அளித்துள்ளதால், கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமலும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன