டி.ஐ.ஜி. ரூபாவுக்கு உதவிய கைதிகளை காவலர்கள் தாக்கியதா புகார்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட புகாரில், சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவுக்கு உதவிய கைதிகளை காவலர்கள் தாக்கியதாகவும், பெல்காம் சிறைக்கு மாற்றியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க, சிறைத்துறை இயக்குனர் சத்தியநாராயண ராவ், ஒரு கோடி ரூபாயும், மற்ற சிறைத்துறை அதிகாரிகள் மொத்தமாக ஒரு கோடி ரூபாயும் லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார். டி.ஐ.ஜி. ரூபாவின் புகார் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிட்டியை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நியமித்தார். இந்நிலையில் சிறையில் நடக்கும் சம்பவங்களை ஆதாரங்களுடன் டி.ஐ.ஜி. ரூபாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற கைதிகள் 32 பேரை, மாற்று உடையில் சென்று காவலர்கள் அடித்து துன்புறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. மாற்று உடையில் இருக்கும் காவலர்கள் லத்திகளுடன் சிறையில் இருந்து வெளியே வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் வேனில் அழைத்து செல்லப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டனர். வேனில் இருந்து இறங்கிய கைதிகள் காயங்களுடன், நடக்க முடியாமல் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வேன் புறப்பட்ட சுமார் அரை மணிநேரம் கழித்தே மாற்று உடையில் உள்ள காவலர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!