டிடிவி தினகரனை ஏற்க முடியாது – அமைச்சர்கள் ஆவேசம்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கூட்டங்களில் பேசிய அமைச்சர்கள், இரட்டை இலை சின்னம் விரைவில் கைப்பற்றப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அப்போது டிடிவி தினகரனை அவர்கள் அனைவரும் சரமாரியாக விமர்சித்தனர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்று பேசினர். கும்பகோணத்தில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தினகரனை ஏற்க முடியாது என்றும், சசிகலாவை தவிர்க்க முடியாது என்றும் கூறினார்.

முதலமைச்சர் நாற்காலிக்காக சிலர் பேயாக அலைவதாக அமைச்சர் துரைக்கண்ணு குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த திமுக தற்போது, மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சில புல்லுருவிகள் ஆட்சியை கலைக்க திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் நடக்காது என்றார்.

தருமபுரியில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், ஜெயலலிதாவின் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.

விருதுநகரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இரட்டை இலை சின்னத்தை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா பங்கேற்காத நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் கூட்டத்தை புறக்கணித்தனர்.

பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ஓட்டு போட்ட மக்களுக்கு எதுவும் செய்யாமல், 19 எம்.எல்.ஏ.க்கள் ஒளிந்து கொண்டு, ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக சாடினார்.

திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். கட்சியின் உறுப்பினராக கூட இல்லாத தினகரனை, தலையில் தூக்கிவைத்து ஆடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன