ஜெமினி மேம்பாலத்தின் மீது பெண்ணை தாக்கி 13 சவரன் நகை வழிப்பறி

சென்னையில் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஜெமினி பாலத்தின் மீது தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி 13 சவரன் நகைகளை வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோபாலபுரம் கணபதி காலணியை சேர்ந்தவர் ரயில்வே அதிகாரி முருகன். இவரது மனைவி லதா, டியூசனில் படிக்கும் தனது மகளை அழைத்துக் கொண்டு செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஜெமினி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இரு மர்ம நபர்கள் லதாவின் இருச்சக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லதாவும், அவரது மகளும் தலை மற்றும் காலில் அடிப்பட்டு வலியில் துடித்தனர். அவர்களது கூச்சல் சத்தத்தை பொருட்படுத்தாத கொள்ளையர்கள் லதா அணிந்திருந்த 13 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

ஏதோ விபத்து என நினைத்து சில வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி கூட்டம் கூடியதை அடுத்தே மேம்பாலத்தின் மீது அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் அங்கு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் தேனாம்பேட்டை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அமெரிக்க தூதரகத்திற்காக எப்போதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஜெமினி மேம்பாலத்தின் மீது நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன