சொத்துகளை அபகரித்துவிட்டு பெற்றோரை விரட்டிய பிள்ளைகள்

நகை, பணம், வீடுகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தாங்கள் பெற்ற பிள்ளைகள் அனாதையாக விட்டு விட்டதாகக் கூறி வயதான தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த 82 வயதான கஸ்தூரி மூதாட்டிக்கும், அவரது கணவரான 85 வயதான பக்கிரிசாமிக்கும், பார்த்தசாரதி, சேகர், தயாளன் என்ற 3 மகன்களும், உமா தேவி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் தயாளன் என்பவர் தவிர்த்த மற்ற மூன்று பிள்ளைகளும், தங்களுக்குச் சொந்தமாக இருந்த 4 வீடுகள், 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 190 சவரன் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், பின்னர் அனாதையாக விட்டு விட்டதாகவும் பக்கிரிசாமி – கஸ்தூரி தம்பதியர் வேதனை தெரிவித்துள்ளனர்.

அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட பிள்ளைகள், தங்களை பார்த்துக் கொள்ளாமல், வீட்டை விட்டு செல்லுங்கள் என்று கூறியதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க கூறியது அனைவரையும் கலங்க வைப்பதாக இருந்தது.

வசிக்க வீடு இல்லாமல், ஆதரவுக்கு ஆள் இல்லாமல் அனாதையான அவர்கள் இருவரும், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடக்க முடியாத நிலையில் இருந்த கஸ்தூரியை வீல் சேரில் அமர வைத்தபடி, கணவர் பக்கிரிசாமி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

தங்களது சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி அவர்கள் இருவரும் கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புழல் போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன