சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுவன் பலி

சேலத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வமணி என்பவரின் ஒன்பது வயது மகன் தருணுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருண், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் தருண் பரிதாபமாக உயிர் இழந்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தான் தருண் உயிரிழந்ததாகவும், சிறுவனுடைய தாய் உமாவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே சேலம் அம்மாபேட்டை குமரன் காலனியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான மெஹராஜ் பானு டெங்கு காய்ச்சலால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று சிறுவன் உயிரிழந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

உயிரிழப்புக்கு காரணம் டெங்குக் காய்ச்சல் இல்லை என்றும், சிகிச்சை பெற வருபவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்ததாகவும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆட்சியர் சம்பத், காய்ச்சல் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன