Advertisement

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பொன்னேரியை சேர்ந்த மதன கோபாலின் மனைவி செல்விக்கு, கடந்த 12ஆம் தேதி ராயபுரத்தில் உள்ள அரசு RSRM மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள தாய்சேய் நல பிரிவில் செல்வி சிகிச்சை பெற்று வந்தார். இன்று நண்பகலில் அங்கு வந்த பெண் ஒருவர் செல்வியின் கவனத்தை திசை திருப்பி, குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.

குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த செல்வி, மருத்துவமனையில் இருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துரித நடவடிக்கையில் இறங்கிய பெண் போலீசார் மருத்துவமனையில் உள்ள ஏழு வாயில்களையும் பூட்டி, குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதலுக்குப் பிறகு 7வது வார்டில் கட்டிலுக்கு அடியில் குழந்தையுடன் பதுங்கி இருந்த ரம்ஜான்பேகம் என்பவரைக் கைது செய்து குழந்தையை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரெஜினா என்பவர் குழந்தை கடத்தி வருமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், ரம்ஜான் பேகத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாரட்டினர்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன