Advertisement

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் அதிகாரியின் மகனை கொலை செய்துவிட்டு, கடத்தி வைத்திருப்பதாக நாடகமாடிவர்கல் கைது

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் அதிகாரியின் மகனை கொலை செய்துவிட்டு, கடத்தி வைத்திருப்பதாக நாடகமாடி 50 லட்சம் ரூபாய் பறிக்க திட்டமிட்ட பள்ளிகால நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கூடா நாட்பு கேடாய் முடிந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரில் வசித்து வருபவர் அஜய்குமார்.. இவர் சென்னை மெட்ரோ ரெயில் பணிகளின் மேற்பார்வை அதிகாரியாக பணி புரிந்துவருகிறார். அஜய்குமாரின் மகன் அவினாஷ் பூசன் ஐடிஐ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவினாஷ் கடந்த 7ஆம் தேதி மாயமானார்..

10ந்தேதி அவினாஷின் செல்போனில் இருந்து இந்தியில் பேசிய மர்ம நபர் ஒருவர் , அவினாஷை பெங்களூரில் கடத்தி வைத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அவனை விடுவிப்போம் என்று மிரட்டி உள்ளான்.

இதனால் பதற்றம் அடைந்த அஜய்குமார், தனது மகன் கடத்தப்பட்டது குறித்து சாத்தங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் கெங்கேஸ்வரன் இந்தி தெரியாது என்பதால் இந்தி தெரிந்த கஞ்சாவியாபாரி வெங்கடேசனை கையில் வைத்துக்கொண்டு வழக்கை விசாரித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு ஏன் சென்றாய் என்று அஜய்குமாருக்கு மீண்டும் மிரட்டல் போன் வந்ததால் அவர் துணை ஆணையர் கலை செல்வத்திடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலக்கியதில் கடத்தல் கும்பல் எண்ணூரை அடுத்த சடையங்குப்பத்தில் இருந்து கொண்டு பெங்களூரில் இருந்து பேசுவது போல நாடகமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவினாஷை சாமர்த்தியமாக மீட்க திட்டமிட்ட காவல்துறையினர் பாரிமுனைக்கு சென்று 50 லட்சம் ரூபாய் என்று கொடுப்பதற்காக சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் டம்மி ரூபாய் நோட்டுக்களை வாங்கி ஒரு டிராவல் பேக் நிறைய அடைத்து வைத்தனர். போலீசார் கஞ்சாவியாபாரி வெங்கடேசனையும் தங்களுக்கு துணையாக அழைத்துச்சென்றுள்ளனர்.

அதன் பின்னர் போன் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையின் கோணத்தை மாற்றினர். அவினாஷ் மாயமான அன்று கஞ்சா வியாபாரி வெங்கடேசனுடன் சுற்றியது தெரியவந்ததால் அவனை முறையான கவனிப்புடன் விசாரித்த போது அவினாஷ் கடத்தல் தொடர்பான மர்மம் விலகியது

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய அவினாஷ் , தனது பள்ளி கால நண்பனும் கஞ்சாவியாபாரியுமான வெங்கடேசனுடன் சேர்ந்து ஓசியில் மது அருந்திவிட்டு அண்ணா நகரில் உள்ள மசாஜ் பார்லர்களுக்கு சென்றுவருவது வழக்கம். அதற்கான செலவுகளை எப்போதும் வெங்கடேசனே கொடுத்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தும் போது அவினாஷிடம் பணம் கேட்டு வெங்கடேசன் தகராறு செய்துள்ளான். மேலும் அவினாஷை கடத்தி வைத்திருப்பது போல நாடகமாடி அவனது தந்தையிடம் பணம் பறிக்கலாம் என்றும் யோசனை கூறி உள்ளான்.

இதற்கு சம்மதிக்காத அவினாஷ் தனது தந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் என்று கூறி உள்ளார். ஆனால் அண்மையில் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றதற்காக அஜய்குமாருக்கு பெரிய தொகை வந்ததை தெரிந்து வைத்திருந்த வெங்கடேசன் இந்த திட்டத்தை செயல்படுத்த உறுதியாக இருந்துள்ளான்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவினாஷை அடித்து கொலை செய்து சடையங்குப்பத்தில் உள்ள ரெயில்வே பாலத்துக்கு அடியில் உள்ள புதர்பகுதியில் இருந்த குழியில் போட்டு புதைத்துள்ளனர். அவினாஷ் உயிருடன் இருப்பது போல … கடத்தல் நாடகமாடி அவினாஷ் போனில் இருந்து பேசி 50 லட்சம் ரூபாய் கேட்டு இந்தியில் மிரட்டி உள்ளான் வெங்கடேசன். வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில் கூட்டாளி ரமேஷை கைது செய்த போலீசார் மற்றொரு கூட்டாளி சூர்யாவை தேடிவருகின்றனர்.

ஆனால் போலீசாரோ கடத்தல் நாடகமாடிய கொலையாளி வெங்கடேசனிடமே அவினாஷை மீட்க உதவி கேட்டுள்ளதும், மேலும் அவனை கையில் வைத்துக்கொண்டு தான் சாமர்த்தியமாக டம்மி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றவும் திட்டமிட்ட கூத்தும் அரங்கேறி உள்ளது ..! மேலும் புதைக்கப்பட்ட அவினாசின் சடலத்தை மீட்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் காவல்துறை கண்டித்து சாலையை மறியலில் ஈடுபட்டனர்

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரனமாய் நிகழ்ந்திருக்கிறது இந்த கொலை சம்பவம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன