Advertisement

சிறுமிகளையும், பெண்களையும் நேர்த்திக்கடன் என்ற பெயரில் விலைமாதுவாக மாற்றும் விபரீத திருவிழா

அனைத்துத் துறைகளிலும் சாதிப்பவர்களாக பெண்கள் உருவாகி இருப்பதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் வேளையில், சிறுமிகளையும், பெண்களையும் நேர்த்திக்கடன் என்ற பெயரில் விலைமாதுவாக மாற்றும் விபரீத திருவிழா ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. ஆந்திர மாநில எல்லையை யொட்டிய, திருவள்ளூர் மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களான கனக்கம்மாச்சத்திரம்…வீரராகவபுரம்…கூர்மவிலாசபுரம்…போன்ற ஊர்களில்தான், மாத்தம்மன் திருவிழா என்கிற மகளிரை இழிவுப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அரங்கேறிவருகின்றது.

மாத்தம்மான் உக்கிரமாக இருப்பதாக காட்டுவதற்காக வினோதமாக தரைவில் மண்டியிட்டு சாமி ஆடும் இருவரின் செயல்பாடுகள் வேடிக்கையாக இருக்கிறது.

குடும்பத்தில் நிலவும் பிரச்சனை, தீராத நோய் என்றால் அதனைத் தீர்ப்பதற்கு நேர்த்திக்கடனாக, தங்களது குடும்பத்தில் 10 வயது முதல் 24 வயது வரை உள்ள ஒரு பெண்ணை மாத்தம்மனுக்கு நேர்ந்துவிடுவதாக கூறி, அந்த பெண்ணை விலைமாதாக விருப்பப்பட்டு அனுப்பி வைக்கிறாரர்கள் என்றால் அந்த கொடுமையை என்ன சொல்வது ..! இதில் யார் வீட்டு பெண்ணை முதலில் அனுப்பி வைப்பது என்று போட்டி வேறு..!

மாத்தம்மா விற்கு நேர்ந்து விடப்பட்ட அந்த சிறுமியை ஒரு மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து, அவர்களின் உறவினர்கள் உள்பட கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி, மேளத்தாளத்துடன், வயல் பகுதிக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்து அப்பெண்ணை கோவிலுக்கு அழைத்து வந்து விடுகிறார்கள்

அதன் பிறகு அந்த பெண் அணிந்திருக்கும் ஆடைகளை 5 சிறுவர்கள் சேர்ந்து களையும் அவலமும் அரங்கேறுகிறது..! அந்த பெண்ணுக்கு இணையாக கிடா ஒன்றையும் நேர்ந்து விடுகிறார்கள்..மாத்தம்மன் உக்கிரமாக இருப்பதாக கூறி அந்த கிடாவை பிடித்து சாமி ஆடும் நபர்கள், கழுத்தை வாயால் கடித்து துண்டாக்கி கடித்து வீசி விளையாடுகிறார்கள்

இந்த நிகழ்விற்கு பிறகு அந்த பெண் குழந்தை படிப்பை தொடர முடியாது,கோவில்தான் தங்க வேண்டும்..! அங்கிருந்து அந்த பெண் விருப்பபட்டவர்களுடன் சேர்ந்து வாழலாம், என்ன உறவு முறையாக இருந்தாலும் தப்பில்லை, குழந்தை பெற்ற பின்னர் பிடிக்காவிட்டால் குழந்தையுடன் அந்த நபரை அப்படியே விட்டுவிட்டு வேறு ஆண்களுடன் செல்லலாம் ..! இப்படி ஒரு விபரீத நிகழ்வை திருவிழா என்று காலம் காலமாய் செய்து வருகின்றனர். இதில் உச்சகட்ட கொடுமை … இப்படி நடக்கக்கூடிய நிகழ்வுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிப்பது தான்..!

சமீப காலமாக அனேக குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய …..பெண் ஆட்சியர் சுந்தரவள்ளி இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த கொடுமையை தட்டிக்கேட்பது யார் ? சிறுமிகள் முதல் வயது வந்த பெண்கள் வரை சூறையாடப்படும் இந்த அத்துமீறலை தட்டிகேட்க அரசின் சமூக நலத்துறையோ, பெண் உரிமை அமைப்புகளோ… ஜனநாயகமாதர் சங்கமோ இதுவரை முன் வரவில்லை என்பது தான் வேதனை கலந்த உண்மை..!

காலங்கள் மாறி தற்போதுதான் பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர் இந்த நிலையில் பெண்களை போகப்பொருளாய் மாற்றும் சடங்குகளையும் சாத்திரங்களையும் தீயிட்டு கொளுத்தி, பாதிகப்பட்ட பெண்களை மீட்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன