கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் – பி.வி.சிந்து சாம்பியன்

கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். கொரியா ஓபன் இறுதிப் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹரா ((Nozomi Okuhara)) வை எதிர்கொண்டார். சூப்பர் சீரிஸ் போட்டியில் இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடிய பி.வி.சிந்து, முதல் சுற்றில் 22க்கு 20 என்ற கணக்கில் நொஸோமியை வீழ்த்தினார்.

ஆனால் இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நொஸோமியின் ஆட்டத்துக்கு சிந்துவால் ஈடு கொடுக்க முடியாததால், 21க்கு 11 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை சிந்து இழந்தார். இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து கவனமாக விளையாடி, 21க்கு 18 என்ற கணக்கில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நொஸோமியிடம் பெற்ற தோல்விக்கு சிந்து பழி தீர்த்துக் கொண்டார். சூப்பர் சீரிஸ் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, கொரியா சூப்பர் சீரிஸை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன