கொடைக்கானலில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டம் ? – போலீசார் தீவிர கண்காணிப்பு

கொடைக்கானல் அருகே வட்டக்கானல் என்ற இடத்தில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, உளவுத்துறை தகவல் தெரிவித்ததையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மன்ஸீத் முகமது, ஸ்வாலித் முகமது, ரஷீத் அலி, சஃபான், ஜாசிம் உள்ளிட்ட 8 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வட்டக்கானலுக்கு வரும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இந்த தகவலை அதிகாரிகள் உளவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியுள்ள தகவலை உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் பாதுகாப்புக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வட்டக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன