குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வெங்கைய நாயுடு போட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெங்கைய நாயுடு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக,பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கட்சித் தலைவர் அமீத்ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

வெங்கைய நாயுடு தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு மிகப் பொருத்தமானவர் என்று ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட பொதுவாழ்க்கையைக் கொண்டுள்ள வெங்கைய நாயுடுவை தமக்கு பல ஆண்டுகளாகத் தெரியும் என்றும், கடினஉழைப்பும், கொள்கைப் பிடிப்பும் உடைய அவர், கட்சிகளைக் கடந்து அனைத்து தரப்பினரின் மதிப்பையும் பெற்றவர் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று முற்பகல் 11 மணியளவில் வெங்கைய நாயுடு தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

இதையொட்டி, தாம் வகித்து வந்த மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருகிற 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!