Advertisement

கீழடி அகழாய்வுக்கு மூடுவிழா?

கீழடி அகழ்வாய்வு இனி நடைபெறுமா என்ற சந்தேகம் வலுத்துவரும் நிலையில், நான்காம் கட்ட அகழ்வாய்வு மேற்கொள்வது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூர் என்ற இடத்தில், தொல்லியல் துறை சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழ்வாராய்ச்சி தொடங்கி நடைபெற்றது. முதற்கட்ட அகழாய்வில் உறைகிணறுகள், முத்து, பவளம், கண்ணாடி மணி, தந்தத்தில் செய்யப்பட்ட தாயக்கட்டை உள்ளிட்டவைகள் கிடைத்தன. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் சாயத் தொழிற்சாலை கட்டடங்கள், அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகள் கிடைத்தன. மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ள நிலையில், அகழாய்வுக்கு தலைமை தாங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், இந்தாண்டு மே மாதம் ஸ்ரீராமன் என்பவர் புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2ஆம் கட்ட அகழாய்வுகள் 2 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்ட பணிகள் தாமதமாக தொடங்கியதோடு, வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே நடைபெற்றது. இப்படி குறுகிய இடத்தில் நடைபெற்றாலும், கண்ணாடி மணிகள், 5 தங்கப்பொருட்கள், ஒளிய(ன்) என்ற பெயர் கொண்ட பானை ஓடு உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இதனை தெரிவித்த கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், தற்போது ஆய்வு நடைபெறும் கட்டடத்தின் தொடர்ச்சி கிடைக்கவில்லை என்றும் இனி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி வரும் 30ந்தேதியுடன் முடிந்த பின்னர், அதன் ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக ஏற்கெனவே கூறியிருந்தார்.

இதனால் தமிழர்தம் பண்பாட்டிற்கு கண்முன் கிடைத்த சான்றான கீழடி அகழாய்வு இனி நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில், நான்காம் கட்ட அகழ்வராய்ச்சி தொடங்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என்று ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன