கிணற்றில் இருந்து 4 வயது குழந்தையுடன் பெண்ணின் சடலம் மீட்பு

தேனியில் கிணற்றில் இருந்து 4 வயது குழந்தையுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி கே.ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மனைவி சரஸ்வதி.

கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், சரஸ்வதி, தனது 4 வயது பெண் குழந்தை மற்றும் 3 மாத கைக்குழந்தையுடனும் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை காட்டுபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு, தமது மகள் ஹர்சினியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சரஸ்வதி வீடு திரும்பாததால், அவரது தந்தை லட்சுமணன் தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் சரஸ்வதி மற்றும் குழந்தை ஹர்ஷினியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டனர். சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். குடும்பத் தகராறில் சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன