Advertisement

கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் -முன்னாள் காதலன் உள்ளிட்ட 4பேர் கைது

சென்னையில் கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி 8 லட்சம் வரை பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலிப்பதாக கூறி மாணவிக்கு முகநூலில் அறிமுகமான நபர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தது அம்பலமாகியுள்ளது.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பயின்று வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் மாணவியை தொடர்பு கொண்டு, அவரது நிர்வாண படம் தங்களிடம் இருப்பதாகவும், குறித்த இடத்திற்கு வரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மாணவி அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவிக்க, அந்த நபர்களை மாணவியின் தாயார் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து தனது மகளின் எதிர்காலத்தை பாழாக்கிவிட வேண்டாம் என கெஞ்சி கேட்டும், மாணவி ஒரு இளைஞருடன் இருப்பது போன்ற படத்தை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாணவியின் எதிர்காலத்தை நினைத்து அவரது தாயார் பணம் கொடுக்க சம்மதித்துள்ளார்.

அவ்வாறு கடந்த இரு மாதங்களாக மாணவி மற்றும் அவரது தாயாரிடம் அந்த 3 பேர் கும்பல் 8 லட்சம் வரை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த நபர்கள் மூவரும் இறுதியாக 20 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், அதன் பிறகு தொந்தரவு செய்யமாட்டோம் எனவும் கூறி மிரட்டியுள்ளனர். இதுவரை கொடுத்த பணம் 8 லட்சமும் மாணவியின் திருமண செலவிற்காக வைத்திருந்த சேமிப்பு என கூறி கெஞ்சி கேட்டும் அவர்கள் கேட்கததால், வேறு வழியில்லாமல் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த கும்பலை பிடிக்க திட்டமிட்ட குமரன் நகர் போலீசார் மாணவியின் தாயாரை வைத்து பணம் தருவதாக பேச வைத்து அசோக் நகர் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். திட்டமிட்டபடி அங்கு வந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்த குமரன் நகர் போலீசார் விசாரணை செய்ததில், பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலனான அமலேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த செய்த சதி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு மாணவிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான கடலூரை சேர்ந்த அமலேஷ் முதலில் நட்பாக பழகி பின்னர் காதலர்களாகியுள்ளனர்.

நாளடைவில் அமலேஷின் நடவடிக்கை பிடிக்காததால், மாணவி அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலேஷ் தனது நண்பர்களான கோகுல், மைக்கேல், ருத்ரா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, மாணவியும், அமலேஷும் சேர்ந்து வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதை வைத்து பணம் பறித்துள்ளார். 4 பேர் மீதும் பெண் வன்கொடுமை, மிரட்டல், கூட்டுச் சதி என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குமரன் நகர் போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் முன்பின் அறியாமல் எளிதில் ஏற்படும் நட்புகளுடன் கவனமாக இருக்க வேண்டும், அதிலும் பெண்கள் இது போன்ற மோசடி பேர் வழிகளிடம் இருந்து சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன