கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிடமாற்றம்

சிறையில் சசிகலாவின் அறையில் தனியாக சமையல் கூடம் அமைத்துக் கொள்ள விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக, சிறைத்துறை டிஐஜி ரூபா கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்காக சிறைத்துறை இயக்குனராக இருக்க கூடிய சத்தியநாராயண ராவ் மற்றும் சில அதிகாரிகள் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

தான் புகார் எழுப்பிய பிறகு, சசிகலாவுக்கு தனி சமையலறை அமைக்கப்பட்டது தொடர்பான வீடியோ பதிவு சிறைத்துறை அதிகாரிகள் சிலராலேயே அழிக்கப்பட்டு விட்டதாகவும் டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் சிறையில் நடக்கும் சம்பவங்களை ஆதாரங்களுடன் டி.ஐ.ஜி. ரூபாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற கைதிகள் 32 பேரை, மாற்று உடையில் சென்று காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்பட்டது.

மாற்று உடையில் இருக்கும் காவலர்கள் லத்திகளுடன் சிறையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

32 கைதிகளும் வேனில் பெல்காம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, கைதிகள் காயங்களுடன், நடக்க முடியாமல் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகின.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், சிறைத்துறை டிஐஜி ரூபா, அடுத்த உத்தரவு வரும் வரை, பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகளுக்கு எதிராகவும், சசிகலாவுக்கு எதிராகவும் புகார் அளித்த சில தினங்களிலேயே ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!