கந்துவட்டி கொடுமையால் பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

நெல்லையில் கந்து வட்டிகேட்டு ஆபாசமாக பேசியதால் மாற்று திறனாளியின் மனைவி ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது. நெல்லை டவுனில் வசிக்கும் மாரிமுத்து என்ற மாற்று திறனாளியின் மனைவி கோமதி என்பவர் தான் கந்து வட்டி கொடுமைக்கு பலியானவர்..!

கோமதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரிடம் 10 சதவீத வட்டிக்கு 25ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

இதுவரை வட்டியுடன் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அசல் தொகையையும் கட்டி முடித்த கோமதியால் மீதம் உள்ள 15 ஆயிரம் ரூபாய் அசல் தொகைக்கு கடந்த இரண்டு மாதமாக வட்டி கட்ட இயலவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து கோமதியின் வீட்டுக்கு வந்த கந்துவட்டி மல்லிகா அவரையும் மகளையும் ஆபாசமாக வசைபாடியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கோமதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து கந்துவட்டி மல்லிகா மீது தற்கொலைக்கு தூண்டியதாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன