என்.எச் 65 என்ற அபாய வழிச்சாலையில் தொடரும் விபத்துகள்

திருப்பூரை சேர்ந்த ஹிகோ பேசன் நிறுவன அதிபர் சிவக்குமார் என்பவர் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றுவிட்டு மகிந்த்ரா சைலோ காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். காரை தினேஷ் என்பவர் ஓட்டிவந்தார்,கரூர் அடுத்த நல்லிபாளையம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மேட்டுப்பாளையத்தில் இருந்து கரூருக்கு மணல் ஏற்றி செல்வதற்காக வந்த லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. அப்போது சைலோ காரின் டீசல் டேங் உடைந்ததால் தீப்பிடித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபரீத விபத்தில் சிக்கி தொழில் அதிபர் சிவக்குமார், டிரைவர் தினேஷ் லாரி டிரைவர் ரமணா ஆகியோர் தீயில் கருகி பலியானர்கள். கரூர் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடித்தீயை அணைத்தனர்

காரின் பின் இருக்கையில் இருந்த ரமேஷ் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மேலும் இருவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் ஓட்டுனர் கண் அயர்ந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

இந்த கோர விபத்துக்கு கார் ஓட்டுனர் தூக்கத்தில் இருந்ததை காவல்துறையினர் சுட்டிக்காட்டினாலும் என்.எச் 65 என்று அழைக்கப்படும் இந்த 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் கோர விபத்துக்களுக்கு
சாலையின் நடுவே அமைக்கப்பட வேண்டிய தடுப்புச்சுவர் அமைக்கப்படாததே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் இதே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மிகிந்த்ரா ஸ்கார்பியோ வாகனம் ஒன்று லாரி மீது மோதி 6 பேர் பலியானதற்கும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் இல்லாததே காரணம் என்றும் வாகன ஓட்டிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வாகன ஓட்டிகளும் இது போன்ற அபாயகரமான சாலைகளில் சற்று நிதானத்துடன் வாகனங்களை இயக்குவது நல்லது.

சாலையில் குறுக்கே சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை சாலைத்தடுப்புச்சுவர் அமைத்து விபத்துகளை தடுப்பதிலும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன