ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம், ஒரு வாரத்திற்குப் பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சதாம் உசேனுக்கும் அண்ணி சபானாவிற்கும் முறையற்ற உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம், வீட்டிற்கு தெரிய வந்ததும், சதாம் உசேனுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சதாம் உசேனின் உறவினர் மகபூப் என்பவருக்கும், சபானாவிற்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சதாம் உசேனை சபானா கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சதாம் உசேன் ஆத்திரத்தில் இருந்ததால், மகபூப் உடனான தொடர்பை எங்கே தனது கணவருக்கு சதாம் உசேன் கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் இருந்த சாபானா, மகபூப் உடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

திங்கள் கிழமை இரவு, சதாம் உசேனை, தனது வீட்டிற்கு அழைத்த சபானா, மகபூப்புடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி சதாம் உசேனை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி மகனூர்பட்டி சாலையோரம் புதைத்துள்ளனர். விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற சிங்காரப்பேட்டை போலீசார், சதாம் உசேனின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். முறையற்ற உறவால் ஏற்பட்ட பிரச்சனையால், பிறந்து 40 நாள்களே ஆன பச்சிளங்குழந்தை தந்தையை இழந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன