உத்தரப் பிரதேசத்தில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில அரசு காரணம் அல்ல – முதலமைச்சர் ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என்ற குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்துள்ளது. மூளைக் காய்ச்சல் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக முதலமைச்சர் பதில்அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள BRD அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவமனை நிர்வாகமும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளை காரணம் காட்டிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையே முழுமுதற் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகித்து வந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி இருந்ததால், அந்நிறுவனம் சப்ளையை நிறுத்திவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை, ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கி விட்டதாகவும் புகார் எழுந்தது கோரக்பூர் நிலவரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் அலுவலகமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதனிடையே, அலட்சியமாக செயல்பட்டதாக பிஆர்டி மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தமக்கு பணிநீக்க உத்தரவு எதுவும் வரவில்லை என்று கூறியுள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர், ஏற்கனவே பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

நிலுவைத் தொகைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்திய லக்னோவை சேர்ந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். 6 நாளில் 63 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு குறித்து வேதனை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சம்பவத்திற்காக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என சாடியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தங்கள், நாடு முழுவதும் எழுந்த கவலைகளால், மத்திய அரசின் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் கோரக்பூர் விரைந்து, நிலைமையை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதிய்நாத், லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூளைக்காய்ச்சல் பாதிப்பு இன்று நேற்று வந்ததல்ல என்றும், 1978ஆம் ஆண்டிலிருந்தே சவாலாக இருப்பதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன