உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சார்தம் யாத்ரா என்ற பெயரில் இந்துக்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் சாமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத்தில் இருந்து ஜோஷிமத் செல்லும் மலைப்பாதையில் விஷ்ணுபிரயாக் அருகே ஹாத்தி பர்வத் என்ற இடத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டதால், குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

தகவல் அறிந்த மீட்புப் படையினர் சாலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைக்குள் சரிசெய்யப்பட்டு வாகனப் போக்குவரத்து சீர்செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு இயக்குநர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன