Advertisement
Advertisement

கோரக்பூர் மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி -ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில், 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எம்.பியாக வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில், பிஆர்டி (BRD) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான இங்கு கடந்த 2 நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த 5 நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று 23 குழந்தைகளும், நேற்று 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. இன்று மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, 6 நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளினால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதேசமயம், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இருந்ததால், ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆக்சிஜன் விநியோகப் பிரிவில் உள்ள ஊழியர்கள், பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பற்றி கடந்த வியாழக்கிழமையே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, மூளைக்காய்ச்சல் வார்டுகளில் ஆக்சிஜன் விநியோகம் தடைபடுவது குறித்து எச்சரிக்கப்பட்டும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கும் ((Siddharth Nath Singh)), மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டாண்டனும் ((Ashutosh Tandon)) மறுத்துள்ளனர். யோகி ஆதித்யநாத் உத்தரவை அடுத்து இருவரும் கோரக்பூர் மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையொட்டி கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன