இந்தியா ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், மலேசியா மற்றும் இந்தியா அணிகள் களமிறங்கின. போட்டி தொடங்கிய 3 வது நிமிடத்தில் ரமன்தீப் சிங் ஒரு கோலும், மற்றும் 29-வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் ஒரு கோலும் அடித்தனர்.

கடுமையாகப் போராடிய மலேசிய அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்ட நேர முடிவில், இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2003 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, 3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நம் அனைவருக்கும் இது பெருமையான தருணம் என்றும், வெற்றிகள் தொடரட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் மகத்தான இந்த வெற்றியால் இந்தியாவே மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன