Advertisement

ஆருசி தல்வார் கொலை வழக்கு-பெற்றோர் ராஜேஷ், நுபுர் தல்வார் விடுதலை

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில், 2008ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி சிறுமி ஆருஷி அவரது வீட்டில் படுக்கையறையில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆருஷி வீட்டில் பணியாளராக இருந்த ஹேமராஜை காணாததால் அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என உடனடியாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் கழித்து ஹேமராஜின் உடல் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து மீட்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உத்தரப்பிரதேச போலீசார், சிறுமி ஆருஷிக்கும் பணியாளர் ஹேமராஜுக்கும் இடையே தவறான உறவு இருந்ததால், இருவரையும் ஆருஷியின் பெற்றோரும் பல் மருத்துவர்களுமான ராஜேஷ் தல்வாரும், நுபுர் தல்வாரும் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால் முறையாக விசாரிக்காமல் ஆருஷியின் பெற்றோர் மீது வழக்கு ஜோடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, உத்தரப்பிரதேச அரசு சிறுமி ஆருஷி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. முதலில் விசாரணை நடத்திய சிபிஐ குழுவானது, ராஜேஷ் தல்வாரிடம் கம்பவுண்டராக இருந்த கிருஷ்ணா என்பவர், அண்டை வீடுகளில் பணியாளர்களாக இருந்த ராஜ்குமார், விஜய் மண்டல் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆருஷியையும், ஹேமராஜையும் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியது. ஆனால் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தவறியதால், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மற்றொரு சிபிஐ குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. ஆருஷி கொலையில் அவரது தந்தை ராஜேஷ் தல்வாரை சந்தேகிக்க இடமிருந்தாலும், உரிய சான்றுகள் இல்லாததால் வழக்கை முடித்துவிடலாம் என காசியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஏற்க மறுத்துவிட்ட காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், ஆருஷி கொலையில் அவரது பெற்றோர் மீது குற்றம்சாட்டி வழக்கு விசாரணையை நடத்தியது. 2013ஆம் ஆண்டில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் செய்த மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சிறுமி ஆருஷியை கொலை செய்தது அவரது பெற்றோர்தான் என்பதை ஐயத்திற்கிடமற்ற வகையில் சிபிஐ நிரூபிக்கத் தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் பெற்றோரை தண்டிக்க முடியாது என்று கூறியுள்ளனர். எனவே சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி, ஆருஷி கொலை வழக்கிலிருந்து அவரது பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரை விடுவித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் சிறுமி ஆருஷியை கொலை செய்தது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன