Advertisement
Advertisement

ஆட்சியர் அலுவலகத்தில் ரம்மி.. அதிகாரிகளின் அலட்சியம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வேதனையுடன் விவசாயிகள் தங்களது குறைகளை கூறிக் கொண்டிருக்க, அதிகாரிகள் சாவகாசமாக ரம்மி விளையாடிக் கொண்டிருந்தனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், விவசாயிகளுக்கான குறை தீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவற்றில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக அழைத்து, நிவர்த்தி செய்யுமாறு உத்தரவிடுவார். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், போகப்போக வெறும் சம்பிரதாய கூட்டங்களாக மாறிப்போனது காலத்தின் கொடுமை.

வறட்சி, நோய் தாக்குதல், கடன் தொல்லை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள், தங்கள் மனக்குமுறலையாவது அரசுக்கு தெரிவிப்போம் என்ற நோக்கில் குறைதீர் கூட்டங்களில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை கூறி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் கூறும் குறைகளை கேட்கக்கூட அரசும் அதிகாரிகளும் தயாராக இல்லை என்பது தான் வேதனையின் உச்சம்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் இன்னல்களை வேதனையுடன் தெரிவித்துக் கொண்டிருக்க, அவற்றை தீர்க்க வேண்டிய அதிகாரிகள், தங்களது செல்போனிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தனர்.

சிலர் தங்களுக்கும் கூட்டத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் செல்போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்த்துக்கொண்டும், அருகில் இருந்தவர்களிடம் அரட்டை அடித்துகொண்டும் இருந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒரு அதிகாரி ஒருபடி மேலே போய் மிகவும் சீரியசாக ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். விவசாயிகள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் முறையிட்டு அதற்கு தீர்வு காணவே இந்த கூட்டம் நடத்தப்படுவது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது எந்த வகையில் நியாயம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன