அரசு துறை தகவல்களை இணையத்தில் வழங்கக் கோரி மனு – பதிலளிக்க உத்தரவு

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசின் துறை தகவல்களை இணைய தளத்தில் மின்னணு முறையில் வழங்கக்கோரிய மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளைப் போல, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு தமிழக அரசும் இணையதளம் உருவாக்கினால், அஞ்சல் செலவு, கால விரையம் குறையுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டம் உருவான போது 2005-லேயே அரசின் ஒவ்வொரு துறையும், அதன் நிர்வாக அமைப்பு, துறை அதிகாரம், பணியாளர் எண்ணிக்கை, ஆவண வகை உள்ளிட்டவற்றை தாமாக முன்வந்து 120 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால், அந்த அறிவுறுத்தலை தமிழக அரசு இதுவரை பின்பற்றவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மத்திய, மாநில அரசுகளின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்களும், தேசிய தகவல் மையமும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன